Sunday 14 August 2011

கலிங்க மகோற்சவம்


 கலிங்கம் என்ற பெயர் கேட்டதுமே, அசோக சக்கரவர்த்தி நிகழ்த்திய கலிங்கப் போர் நினைவிற்கு வரும். வெற்றி பெற்ற போதிலும், அதில் அசோகர் புத்தரின் கொள்கையான அன்பினால் மக்களின் இதயங்களைக் கவர்வதே சிறப்பானது என்று புரிந்து கொண்டு மனம் திருந்திய நிகழ்ச்சி நினைவிற்கு வரும்.

அந்த சரித்திர நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் இன்றும் ஒரிசா மாநிலத்தில் ஒவ்வோர் ஆண்டும் தௌலி எனும் இடத்தில் கலிங்க மகோற்சவம்  சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த மடாலயத்திற்கு அருகே, விஸ்வ சாந்தி ஸ்தூபம் ஒன்று 30 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. இந்த ஸ்தூபத்திற்கும், அருகிலுள்ள ஒரு பெரிய புத்தர் சிலைக்கும் அருகேதான் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

இரண்டு நாள்களாகத் தொடர்ந்து கொண்டாடப்படும் இத்திருவிழாவில், நாடெங்கிலும் உள்ள போர்க்கலை நாட்டியக் கலைஞர்கள் பங்கு பெறுகின்றனர். கேரளத்திலிருந்து கலரிப்பயற்று மணிப்பூரைச் சேர்ந்த டாங் டா மற்றும் ஒரிசாவைச் சேர்ந்த சௌ, பாக்கிய நடனக் கலைஞர்கள் பங்கேற்பு குறிப்பிடத் தக்கவை.

இந்த ஆண்டு, இத்திருவிழா பிப்ரவரி நான்கு மற்றும் ஐந்தாம் தேதிகளில் நடைபெற உள்ளது. மாதத்தின் இறுதி மூன்று நாள்களில் புவனேஸ்வரில் ராஜாராணி திருவிழா விமரிசையாக நடைபெறும். 11ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ராஜாராணி கோயிலின் பரந்த புல்வெளியில் இத்திருவிழா நடைபெறுவதால், இதற்கு அப்பெயர் வந்தது. புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் இவ்விழாவில் பங்கு பெறுவதை கௌரவமாக நினைக்கின்றனர்.
இக்கலை நிகழ்ச்சிகளை ஒரிசா அரசின் சுற்றுலா துறை நடத்துகிறது. மேலும் பிப்ரவரி மாதத்தில் ராஜஸ்தானில் பாலைவன விழா, ஆந்திராவில் தக்கான் விழா, மத்திய பிரதேசத்தில் கஜுராஹோ கலைவிழா ஆகியவையும் நடைபெறுகின்றன.

source : http://www.chandamama.com/

No comments:

Post a Comment